Shop at Amazon

Showing posts with label தவிர்க்க வேண்டியவை. Show all posts
Showing posts with label தவிர்க்க வேண்டியவை. Show all posts

Friday, October 5, 2018

யார் அவர்? - சிந்திக்க வைக்கும் பதிவு

*"நான் குழந்தையாக* இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் *அப்பா."*

அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.

அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.

நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.

என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.

அவர் ஒரு அற்புதமான
கதை சொல்லி,
அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.

காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார்.

அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.

விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.
அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..
சிந்திக்கவும் வைப்பார்.

அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார்.
ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.

நாட்கள் விரைந்தது .

நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. *அம்மாவுக்கு* இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.

அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை.
*அப்பா* அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.

தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார்.

நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.

எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.
அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார்.

சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார்.

எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .

நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.

எனது *தாய் தந்தையர்* பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார்.

நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .

நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.

இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.

இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.

அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்?

அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.

கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது.

இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.

சொல்கிறேன் கேளுங்கள்.

அவரை நாங்கள் *"டிவி"* என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.

அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.
அவருடைய மனைவியின் பெயர் *கம்ப்யூட்டர்.*

இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் *கைபேசி*
இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!

நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வோம்..

இயற்கை  வாழ்வியல் முறையைப் போற்றி, பின்பற்றி வாழ்வோம்..

Tuesday, September 25, 2018

மது உயிருக்கு கேடு - கல்லீரலை காப்பாற்றுங்க பாதுகாப்பாக வைத்திருங்க!


 மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.
அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !



மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். 

இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.
மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.
நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். 

பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். 

அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. 

கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.
இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.
அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். 

மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. 

கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.
கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். 

அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.
கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும்!

இத்தகைய கல்லீரலை காப்பாற்ற
~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~

~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ 

அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம். 

உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும். 

நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.~ 

கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்!

Friday, September 21, 2018

உணவு உடலுக்கு கேடு!

நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.
கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.




1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).

2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II)
MICROWAVED POPCORN.

3. கேன் செய்யப்பட்ட உணவு:
(CANNED, PACKAGED DRINKS):

REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும்.

4.எரிக்கப்பட்ட இறைச்சி:
GRILLED MEATS:

அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.

5.வெள்ளை சக்கரை:
REFINED SUGAR: 

கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக' மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.

6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள்:
(SALTED, PICKLED FOODS):

விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்:
கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சக்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை (CORN SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: REFINED WHITE FLOURS:
மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால் தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்.

9.பண்ணை மீன்கள்:
FARMED FISH:

பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்க படுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.

10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்:
Hydrogenated & Refined Oils: 

விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்பநபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.

மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.

முடிந்த வரை -
"SUGAR FREE", "DIET", "LITE", "FAT FREE" போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்.

Dr.B.Santhosh Saravanan, M.D(A.M)., Ph.D(N.D).,
Naturopathic Physician

Thursday, May 31, 2018

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!



பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. ‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?

“நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.

உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது.

பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.

பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

* பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

* சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

* சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

* கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

* சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

* பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

“கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம், வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார்.
குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?

கார்த்திக் சூர்யா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்.

“பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம்.

க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.
 
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது. இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.”