Shop at Amazon

Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Sunday, December 2, 2018

சிட்டுக்குருவியும் 2.0வும் - எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு.கோவை சதாசிவம்

திரைக்கலைஞர் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட "2.0 " திரைப்படம் வெளியானதிலிருந்து பல முகநூல் நண்பர்கள் அலைப்பேசியில் அழைத்த வண்ணமாக உள்ளார்கள்!


என்னை அழைக்க வேண்டிய அவசியம் என்ன ...?

2005-யில் "சிட்டு " என்கிற தலைப்பில் ஒரு விவரணப்படத்தை இயக்கி சிட்டுக்குருவிகளின் அழிவையும் அதனை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தேன். இப்படம் வெகுமக்களுக்கு செல்லவில்லை என்றாலும் பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சென்றுள்ளது.

இப்போது 2.0- திரைப்படம் வெளியாகி சிட்டுக்குருவிகளைப்பற்றி பலரையும் பேச வைக்கிறது. இப்படம் பறவைகளின் அழிவைப்பேசுகிறது என்று ஆறுதல் கொண்டாலும் பல அபத்தங்களையும் உள்ளடக்கியது என்பதை கவனத்தோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்!

இப்படத்தின் சிட்டுக்குருவியும், செல்போன் டவர்களும் முதன்மையான பேசு பொருளாக உள்ளதாம் (நான் இன்னமும் படம் பார்க்கவில்லை) செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பதிற்கான அறிவியல் தரவுகள் நம்மிடமில்லை! 

ஆனாலும் ஒரு செய்தியை இங்கே பதிவு செய்ய வேண்டும். இந்தியாவில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் பெரும் அளவில் தனியார் வசமுள்ளது. ஒரு செல்போன் டவரில் 10,000 செல்பேசிகளுக்கான சேவையை வழங்க வேண்டிய நிறுவனம். லாப நோக்கில் 30,000 செல்பேசிகளுக்கு வழங்க நேர்ந்தால் இழுவிசை, பரவுவிசை அதிகரித்து கசியும் கதிர்வீச்சில் தேனீக்கள் உள்பட சிறு பறவைகளின் வாழ்வும் திசைமாறும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது!
ஆனால் இவை மட்டுமே காரணம் என்று கருதிவிடக்கூடாது! 2005 - யில் சிட்டு விவரணப்படம் சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு முன்மொழிந்த காரணங்களை பார்ப்போம்!

கால நகர்தலில் உறைவிடங்கள் மாறின, உற்பத்தி பண்பாடும் உணவு முறைகளும் மாறின, உழவு முறை மாறியது, மனித உழைப்பை வேக, வேகமாக மென்று துப்பும் உலகமயத்தொழில் வளர்ச்சி உயிர்களிடம் கொண்டுள்ள அன்பின் ஈரத்தைக்காயடித்துவிட்டது. வெறும் எந்திரங்களாய் ஆனோம் நாம்.

தானியம் போன்ற திட உணவுகளை செரிக்கும் செரிமான உறுப்புகள் குஞ்சுகளுக்கு வளர்ச்சியுற்றிறாத நிலையில் வீடுகளைச்சுற்றிலும் வளர்ந்து கிடக்கும் அவரை, புடலை போன்ற கொடித்தாவரங்களில் தோன்றும் புழுக்களை தாய்பறவை கொத்தி வந்து குஞ்சுகளுக்குக்கொடுத்து வளர்க்கும். இப்புழுக்களை குஞ்சுகள் எளிதாக செரித்து விடும். புழுக்களில் நீர்ச்சத்தும், புரதச்சத்தும் இருப்பதால் குஞ்சுகள் விரைந்து வளரும்.

முன்பெல்லாம் வீடுகளில் தானியங்களை உரலில் இடித்து புடைக்கும் பழக்கம் இருந்தது. இவ்வகை வேலைகளை பாட்டிகள் திறம்படச்செய்வார்கள். புடைக்கும் போது சிதறும் தானியங்களை தாய்பறவை சேகரித்து குஞ்சுகளுக்கு கொடுப்பதோடு அவற்றை கொத்தித்தின்னப்பழக்கும். இப்போது உரல், உலக்கை, முறம், பாட்டி ... யாருமில்லை ஊருக்குள்!

ஒற்றை உணவிற்குப்பழக்கப்பட்டு சோளம், கம்பு, கேழ்வரகு. குதிரைவாலி, தினை, சாமை போன்ற தானிய உணவுகளை இழந்தோம். விசாலமான வாழ்விடங்கள் சுருங்கி நாமே கூடுகளில் வாழ்கிறோம்! குருவிகள் எங்கே வாழும் ..? 

மனிதர்களின் வாழ்வோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி ( பசுமை, வெண்மை புரட்சிகளைப்போல்)  இயற்கைக்கு எதிரான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளின் காரணங்களால் சிட்டுக்குருவி மட்டுமன்று. ஒட்டுமொத்த சிற்றுயிர்களின் அழிவிற்கும் காரணியாக உள்ளது.
வெளிக்காற்று உட்புகாதவாறு கட்டமைக்கப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளின் வாழ்விடம் தகர்ந்தது.

காரீயம் நீக்கப்பட்ட பெட்ரோல், எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் "மெத்தைல் நைத்திரேட் " எனும் வேதிக்கழிவுப்புகையால் காற்று மாசுபடுகிறது. அந்தக்கரிக்காற்றை சுவாசிக்க முடியாமல் பூச்சியினங்கள் மூர்ச்சையற்றுப்போகின்றன. பூச்சிகளை உணவாகக்கொண்டு வாழ்ந்து வந்த பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் போகிறது.

ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் பல்லுயிர்ப்பெருக்க வாழ்வு முறை தகர்கிறது. இதன் தாக்கத்தை உலகின் பல்வேறு நாடுகளும் உணர்ந்துள்ளன.எனவேதான் ஐக்கிய நாடுகள் சபை 2010- ஆண்டை பல்லுயிர் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளது. வயல்களில் பயிர்களுக்கு தெளிக்கும் உயிர்க்கொல்லி இரசாயனங்கள் பூச்சிகளை அழித்து உணவையும் நஞ்சாக்கிய பிறகு, சாப்பிட எதுவும் கிடைக்காத பசித்த குருவிகள் கத்திக்கத்தி ஓய்ந்துவிட்டன. பல சரக்கு கடைகளில் உள்ள உணவுப்பொருட்கள் நெகிழிப்பைகளில் அடைத்து விற்கப்படுவதால் உணவுப்பொருட்கள் சிதறலுக்கு வாய்ப்பில்லை!

புழக்கடையில் பாத்திரம் தேய்த்த காலம் போய் வீட்டுக்குள் சின்னத்தொட்டியில் பாத்திரம் கழுவ, மீதப்பட்ட சோற்றுப்பருக்கைகள் பாதாளச்சாக்கடையில் கழிவோடு கழிவாய் மூழ்கிவிடுகின்றன. நகருக்குள் மனிதர்களை அண்டி வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
பூவுலகில் இயற்கை உருவாக்கியுள்ள உயிர்ச்சூழலை சிதைப்பதும், அழித்தொழிப்பதும் எந்த வகையிலும் நேர்மையாகாது. இயற்கையை அழிப்பதும் ஓர் பயங்கரவாதம்தான்! அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நீடித்த வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். தற்காலிக முயற்சிகளுக்கும் ஒரு சிலரின் பேராசைக்கும் பூமியை பலியிட முடியாது! உலகில் தோன்றியுள்ள கோடான கோடி உயிர்களில் நமது உயிரும் ஒன்று.

சூழலுக்கும், நெடுங்கால வளர்ச்சிக்கும் பங்களிக்கும் கரிசனத்தை "சிட்டு " விவரணப்படம் பேசியுள்ளது. "2.0" சிட்டுக்குருவிகளின் அழிவு குறித்து முன்வைக்கும் காரணங்களை அலசி, ஆராய்ந்து பார்க்க வேண்டும்!

Sunday, July 22, 2018

காவேரித் தாயே போற்றி!

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'
- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.



ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.
இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.

ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.
மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.

ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.

அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.
சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.
நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.
இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?
'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?
முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.
ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.

நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.
காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.
முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.
பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.
சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.
காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.

இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.

“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை
மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"
என்கிறது அகநானூறு (126 : 4-5)

- நம்பிக்கை ராஜ்.

#Cauvery #காவிரி

Tuesday, July 3, 2018

பாகிஸ்தானில் 3 ஆண்டுகளில் காடுகளான வறண்ட மலைகள்..!


பாகிஸ்தானில் 3 ஆண்டுகளில் காடுகளான வறண்ட மலைகள்..! 






இந்தியர்களின் கவனத்துக்கு...

மரங்களை அழிப்பது என்பது இயற்கையின் மீது மனித இனம் நிகழ்த்தக்கூடிய மிக முக்கியமான வன்முறை.
மனிதன் நாகரிகம் அடையத் தொடங்கியதிலிருந்தே இயற்கைமீது வன்முறை செலுத்தத் தொடங்கி விட்டான். ஆரம்பத்தில் தேவைக்காக இருந்த விஷயங்கள் எல்லாம் காலப்போக்கில் வணிகத்துக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் மாற ஆரம்பித்தன. பிரச்னை தொடங்கியது. மரங்களை அழிப்பது என்பது இயற்கையின் மீது மனித இனம் நிகழ்த்தக்கூடிய மிக முக்கியமான வன்முறை. தேவைகளை மீறி வணிகமயமும் மற்றவையும் மரம் வெட்டுவதைச் சர்வதேசச் சந்தையாக மாற்றியுள்ளது. காடுகள் அழிப்பு இங்குதான் தொடங்குகிறது. ஆனால், நமது அண்மை நாடான பாகிஸ்தானில் ஒரு மாபெரும் முன்னெடுப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான ஹெரோஷாவின் பெரும்பாலான நிலப்பரப்புகள் 2015க்கு முன்பு வரை வறண்ட மலைகள்தாம். ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது பாகிஸ்தான் மக்களை மட்டுமல்ல உலகையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. மில்லியன்கணக்கான மரங்கள் அங்கு நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. காடுகளை அழிப்பதற்கு எதிராகப் போராட ஒரு காட்டையே உருவாக்கிவருகின்றனர் பாகிஸ்தான் மக்கள். ஹெரோஷா பகுதியில் 2015 லிருந்து 2016க்குள் 16,000 தொழிலாளர்கள் 9,00,000 மரக்கன்றுகளை நட்டு காடாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவை அனைத்துமே வேகமாக வளரக்கூடிய யூகலிப்டஸ் வகை மரங்கள். கைபெர் பக்துன்க்வா ( Khyber Pakhtunkhwa) மாகாணத்தின் பல்வேறு இடங்களில் கடும் உழைப்போடு இந்த மரம் நடும் வேலை நடந்து வருகிறது..
``அந்த நிலப்பரப்பு இதற்கு முன்பு முற்றிலும் வறட்சியின் நிலமாக இருந்தது. ஆனால், தற்போது வளம் கொழிக்கும் பகுதியாக மாறியுள்ளது” என்கிறார் வனத்துறை மேலாளர் பெர்வைஸ் மனன்(Pervaiz Manan). சில வருடங்களுக்கு முன்பிருந்த புகைப்படங்களையும் தற்போதுள்ள புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த வறட்சியை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் எனவும் சொல்கிறார். அந்தப் புதிய மரங்கள் அப்பகுதிக்கே புத்துயிர் ஊட்டி வருகிறது. இயற்கைச் சீற்றங்களையும் காலநிலை மாற்றங்களையும் எதிர்கொள்ள இந்த மரங்கள் உதவியாய் உள்ளன. மலைப்பகுதியின் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. அதிகப்படியான வெள்ள ஓட்டத்தைக் குறைக்கிறது. மரங்களின் வளர்ச்சிக்குப் பிறகு மழைப்பொழிவும் நன்றாக உள்ளது என்கிறார் வனத்துறை மேலாளர் பெர்வைஸ் மனன்.
அங்கிருக்கும் ஊர்வாசிகளும் இதைப் பொருளாதாரப் பலனாகப் பார்க்கின்றனர். இந்தக் காடுகளின் மூலம் வருமானம் வரும் என்றும் எதிர்பார்க்கின்றனர். முன்பு சும்மா கிடந்த நிலம் இன்று பயனுள்ளதாக மாறியுள்ளது என மகிழ்ச்சியடைகின்றனர். கைபெர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்குப் பகுதியின் பல்வேறு பள்ளத்தாக்குகள் 2006 லிருந்து 2009 வரை பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இப்போது இந்தப் பகுதி முழுவதும் அன்னாசி மரங்களும் மரக்கன்றுகளும் காட்சியளிக்கின்றன. இந்தப் பகுதி வந்தால் நீங்கள் ஒரு மரக்கன்றை நடாமல் செல்ல முடியாது. ஹெரோஷா பகுதியிலும் ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் தொடர்ந்து நிறைய மரங்கள் வளர்க்கப்படுவதற்கு பில்லியன் மரங்கள் சுனாமி (Billion Tree Tsunami) எனும் அரசின் முன்னெடுப்புதான் முக்கியக் காரணம். கைபெர் பக்துன்க்வா மாகாணம் முழுவதும் 42 வகையான 300 மில்லியன் மரங்களை நட்டு வளர்ப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது இந்தத் திட்டம். மேலும் 150 மில்லியன் மரங்களானது நில உரிமையாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. காடுகளை மீளுருவாக்கம் செய்வதில் இன்னும் 730 மில்லியன் மரங்களை வளர்க்கலாம் என இந்தத் திட்டம் கூறுகிறது. ஏறக்குறைய மொத்தக் கணக்கு 1.2 பில்லியன் மரங்கள் எனத் திட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு தகவல்களும் அவர்களுடைய இணையத்தில் இருக்கிறது. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் (International Union for Conservation of Nature(IUCN) ) இத்திட்டத்தினையும் அதற்கான செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளது. இந்த அமைப்பினை பசுமை என்ஜிஓ (Green NGO) என்றும் பலரும் குறிப்பிடுவதுண்டு. இந்தத் திட்டம் முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது. இவ்வளவு அதிகமான மரத்தை நட்டு காடுகளை மீளுருவாக்கம் செய்வது என்பது நிஜத்தில் முடியாத காரியம் என்றனர். அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரையின் படி 12% காடுகள் பாகிஸ்தானில் இருக்க வேண்டும். ஆனால், வெறும் 5.2% மட்டுமே பாகிஸ்தானில் காடுகளாக இருக்கின்றன.
கடந்த 60 வருடங்களில் பாகிஸ்தானின் சிந்து நதிக்கரையில் அமைந்திருந்த 60 சதவிகிதக் காடுகள் அழிந்து போய்விட்டன. தொடர்ச்சியாகச் சிந்து நதியில் நீர்வரத்து குறைந்ததும் 1980களில் நிகழ்ந்த அதிகப்படியான மரங்கள் வெட்டப்பட்டதும் காடுகள் அழிந்துபோனதற்கு முக்கியக் காரணம். பில்லியன் மரங்கள் சுனாமி திட்டம் நவம்பர் 2014ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக கைபெர் பக்துன்க்வா மாகாண அரசு 160 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து இத்திட்டத்தினை செயல்படுத்திப் பல்வேறு பராமரிப்புகளைச் செய்து வருகின்றனர். 2020க்குள் முழுவதுமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். கைபெர் பக்துன்க்வா மாகாணமானது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (Pakistan Tehreek-e-Insaf) எனும் அரசியல் கட்சியால் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தலைமையில் இயங்கி வருகிறது. அடுத்த வருடம் பொதுத்தேர்தல் வரவிருப்பதால் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (Pakistan Muslim League-Nawaz (PML-N)) கட்சிக்கு இது நெருக்கடி கொடுக்கக்கூடியது. இந்தத் தேர்தலில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் முக்கியப் பங்கு வகிக்கும் என அனைவராலும் சொல்லப்படுகிறது. இம்ரான் கான் சுற்றுச்சூழல் தொடர்பான வாக்குறுதிகளைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

காடுகளை மீளுருவாக்கம் செய்யும் இந்தத் திட்டம் அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது என ஒருபுறம் சொல்லப்பட்டாலும் பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் இதனை வரவேற்கின்றனர். மக்கள் பலரும் இதில் தன்முனைப்பாகப் பணியாற்றுகின்றனர். மொத்தத்தில் இயற்கையை மீட்டுருவாக்கம் செய்வதுதான் வருங்காலத்தின் தேவையாக இருக்கும் என்பதை பாகிஸ்தானின் மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.